சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
புகழ்ச் சோழ நாயனார்  

12 -ஆம் திருமுறை   12.410  
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
 
இமயமலையின் உச்சியின் மேல் தம் வேங்கைப் புலிக் கொடியின் குறியைப் பொறித்து, வெண்மையான ஒளி வீசு கின்ற முழுமதி போன்ற வெண்கொற்றக் குடை நிழலின் கீழ் நீண்ட இந்நிலவுலகத்தைக் காத்து, இன்பம் பெருக அரசை அளிக்கும் புகழை யும், கொடையையும் உடைய தமிழ்ச் சோழர்களால் ஆளப்பட்ட சோழ வளநாட்டில், உலகில் வளர்ந்து ஓங்கும் அழகுகள் எல்லாம் தங்குதற்குரிய இடம் இதுவே எனக் தக்க பதி உறையூர் என்னும் மிகுந்த பழைமையுடைய நகரமாகும். *** குலகிரி - இமயமலை. கொடுமுடி - வளைந்த உச்சி. உள்ளுறை - உள்ளே தங்குதற்குரிய. உலகில் உள்ள அழகுகள் எல்லாம் ஒருங்கு உறையும் ஊர், உறையூர் என்பதாம். திருவாம்ஊர் திருவாமூர் என்புழிப் போல. அவ்வணிகளாவன, பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம் ஆகியனவாம். 'ஊர் எனப்படு வது உறையூர் ' என வரும் வழக்கும் காண்க.
அளவற்ற பெரும்புகழையுடைய அந்நகரத்தில் அழகிய மணிகளால் விளக்கம் பெறும் இளவெயிலின் ஒளித் தொகுதி கள், இரவுப் பொழுதை இல்லாமல் செய்து ஒளி வீசுவனவாயும், வீதிகளில் விளங்கும் ஒளியையுடைய மாளிகைகளில் விளங்கும் கொடி வரிசைகள், வானில் விளங்கும் கங்கைப் பேரியாற்றில் தோய்வனவாயும் அமைந்துள்ளன. *** மணிகளின் ஒளி இருளை நீக்கும்; மாளிகைகளின் கொடிகள் விண்ணில் உள்ள கங்கையாற்றில் தோய்வனவாய் நிற்கும். மணிகளின் ஒளியும், கொடிகளின் உயர்வும் குறிக்கப்பெறுகின்றன. சுடர்ப்படலை - ஒளித்தொகுதி. மறுகிலுள்ள மாளிகைகளில் கட்டப் பெற்றிருக்கும் கொடிகள் வானப் பேரியாற்றில் கெழுவும் எனக் கூட்டுக.
மேல் உலகான விண் உலகத்திலும், கீழ் உலகான பாதலத்திலும், மண் உலகத்திலும் உளவான நன்மையால் சிறந்த போகங்கள் அனைத்தினுக்கும் உறுப்பான ஒப்பற்ற வளங்களையுடை யனவாய், வானளாவக் குவிந்த எல்லையற்ற பலவகைப்பட்ட பொருள்களும் ஒருங்கு விளங்கும் கடைவீதிகள் எல்லாம் கடல் என விளங்கின. *** நாகதலம் - விண்ணுலகம்; பிலம் - கீழ் உலகம். ஆகரம் - கடல். போகத்திற்குரிய உறுப்பாவன - அணிகலன்கள், பட்டாடைகள், யாறு கா முதலியனவாம்.
தரை நனையும்படியாக மதநீரைப் பொழிந்து குளிர்ந்த வானம் இடம் கொள்ளும்படி முழங்குகின்ற போர்த்தொழில் வாய்ந்த, உரல் போன்ற அடிகளையுடைய யானைகளும், அருகே அவற்றின் இனம் என வந்து கூடிப் பொழியும் மழையான மதத்தை யும் மின்னலான நெற்றிப்பட்டத்தையும் உடைய கரிய மேகங்களும், யானைகளை வரிசைபெறக் கட்டுகின்ற யானைக் கூடங்களில் எங்கும் பலவாய் வேறு பிரித்தறியப்படாதவாறு விளங்கின. *** யானைக் கூடங்களில் தம் இனம் எனக் கருதி மேகக் கூட்டங்கள் படிந்தன. படிந்த நிலையில் யானைகள் இவை, மேகங்கள் இவை எனப் பிரித்தறிய இயலாதாயின என்பது கருத்து. கறை - உரல். யானைகள் மதமும், நெற்றிப்பட்டமும், கருமை நிறமும் உடையன. அவற்றைப் போலவே மேகங்கள், மழையாகிய மதமும், மின்ன லாகிய நெற்றிப்பட்டமும், கருமை நிறமும் உடையன. எனவே அவற்றிற்கு அவை இனமாயின.
ஒலிக்கும் மணிகளும், குதிரைகளின் கனைப்பும் மிகவும் ஒலிக்க, விளக்கமுடைய குதிரைகளின் நீண்ட வரிசையில் புல்லை உண்ணும் அவற்றின் வாய் நீரில் வரும் நுரை, அலை விளிம்பில் உள்ள நுரைபோல் படியவும், ஒளிவிடுகின்ற கவசங்கள் மலைமீது முகில் எனப் படியவும் விளங்குதலால், பற்பல குதிரைச் சாலைகள் எல்லாம் தோண்டப்பட்ட கடல்களைப் போல் உள்ளன. *** மேலே யானைக் கூடங்களின் சிறப்புக்கூறிய ஆசிரியர், இப்பாடலின் குதிரைக் கூடங்களின் சிறப்பை விவரிக்கிறார். கடலி னிடத்து அலைகளும், நுரையும், மேகம் படிதலும் உள. குதிரைக் கூடத்தில், குதிரைகளின் ஒலியும், அவற்றின் வாயிலிருந்து வரும் நீர் நுரையும், மேலிடு கவசமும் உள்ளன. குதிரைக் கூடங்களுக்கு கடல் உவமையாயிற்று. பரிச்செருக்கும் ஒலி - குதிரைகள் கனைக்கும் ஒலி. மெய்யுறை: குதிரைகளின் மேலிடு கவசம்; சேணம். அடுக்கல் முகில் - மலைகளில் படியும் மேகங்கள். துரங்கசாலை - குதிரைக் கூடங்கள்.
துளைபொருந்திய துதிக்கையையுடைய ஐராவதம் என்னும் யானையும், உச்சைச் சிரவம் என்னும் குதிரையும், திருமக ளும், கடைந்த அமுதமும், கற்பகத் தருவும், சிந்தாமணியும் என்ற இவற்றை எல்லாம் தேவர்கள் எடுத்துக் கொண்டு சென்றமையால், வருந்திய பாற்கடலானது, இவற்றுள் ஒன்றையேனும் மீளப்பெறுவது விரும்பித் தேவரின் உலகத்தை வளைத்தது போல், அங்கு மதிலைச் சூழ்ந்த மலர்கள் நிறைந்த அகழிகள் விளங்கின. *** துரங்க அரசு - குதிரைகளில் மேம்பட்ட அரச குதிரை. இதனை உச்சைச் சிரவம் என்றழைப்பர். கடல், தன்பால் தோன்றிய பொருள்களை எல்லாம் தேவர்கள் கொள்ள, அவற்றுள் ஒன்றை யேனும் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று கருதித் தேவருலகைச் சூழ்ந்ததுபோல, அவ்வூரிலுள்ள அகழி இருந்தது என்றார். இதனால் உறையூர் தேவருலகை ஒத்தது என்பதும், அங்குள்ள அகழி பாற் கடலை ஒத்தது என்பதும் அறியத்தக்கன.
மேகங்கள் தவழ்கின்ற கோபுரங்களையும், ஞாயிறும் திங்களுமாய இரு கதிர்களும் ஏறும் மலர்கள் நிறைந்த பூஞ்சோலை களையும், தேர்கள் உலவுகின்ற அழகிய வீதிகளையும், எத்திசையும் புகழ் பரந்து செல்கின்ற வசையற்ற அழகுகளையும் உடைமையால், கச்சணிந்த கொங்கைகளையுடைய பெண்களிடை ஏறும் மலர் அம்புகளின் செயல் பொருந்திய, சிறந்த உலகம் முழுவதும் பரவுகின்ற புகழ்கொண்ட உறையூர் என்ற நகரத்தின் வளமையைச் சொல்வது அரிதாகும். *** உறந்தை - உறையூர் என்பதன் மரூஉ. மன்மதனின் மல ரம்புகள் ஏறும் மடவார் எனவே அவர்தம் இன்பச் சிறப்புப் பெறுதும். இதன்கண் ஏறும் எனும் சொல் பலவாகப் பலபொருள்களில் அமையச் சொற்பின் வருநிலையணியாக அமைந்துற்றது.
அந்நகரைத் தலை நகராகக் கொண்டு உலகத்தைக் காவல் செய்யும் உரிமை பொருந்திய அரசர் ஆனவர், நிலை பெற்ற திருத்தில்லைப் பதியின் அழகிய வீதிகளில் அழகு விளங்கத் திருப் பணிகள் செய்த சோழரான நீடு விளங்கும் அனபாயச் சோழர்தம் திருக்குலத்தின் மரபு வழியில் முன்தோன்றிய முதல்வராய் விளங்கு பவர்; அவர் காவிரியாறு வளம் செய்யும் சோழநாட்டைக் காக்கும் மன்னரான 'புகழ்ச் சோழர்' என்னும் பெயர் பெற்ற பெருமகனாராவர். *** அந்நகரைத் தலை நகராகக் கொண்டு உலகத்தைக் காவல் செய்யும் உரிமை பொருந்திய அரசர் ஆனவர், நிலை பெற்ற திருத்தில்லைப் பதியின் அழகிய வீதிகளில் அழகு விளங்கத் திருப் பணிகள் செய்த சோழரான நீடு விளங்கும் அனபாயச் சோழர்தம் திருக்குலத்தின் மரபு வழியில் முன்தோன்றிய முதல்வராய் விளங்கு பவர்; அவர் காவிரியாறு வளம் செய்யும் சோழநாட்டைக் காக்கும் மன்னரான 'புகழ்ச் சோழர்' என்னும் பெயர் பெற்ற பெருமகனாராவர்.
அந்நகரைத் தலை நகராகக் கொண்டு உலகத்தைக் காவல் செய்யும் உரிமை பொருந்திய அரசர் ஆனவர், நிலை பெற்ற திருத்தில்லைப் பதியின் அழகிய வீதிகளில் அழகு விளங்கத் திருப் பணிகள் செய்த சோழரான நீடு விளங்கும் அனபாயச் சோழர்தம் திருக்குலத்தின் மரபு வழியில் முன்தோன்றிய முதல்வராய் விளங்கு பவர்; அவர் காவிரியாறு வளம் செய்யும் சோழநாட்டைக் காக்கும் மன்னரான 'புகழ்ச் சோழர்' என்னும் பெயர் பெற்ற பெருமகனாராவர். *** குளிர்தூங்க - தண்ணளி சிறக்க.
பிறைச்சந்திரன் வளர்தற்கு இடமான சிவந்த சடையையுடைய சிவபெருமான், விரும்பி வீற்றிருக்கும் சிவன் கோயில் கள் எல்லாவற்றிலும், நிறைவான சிறப்பு வழிபாடுகள் பலவும் நிகழச் செய்து, திருத்தொண்டில் சிறந்து விளங்கும் தொண்டர் களைக் குறையிரந்து, தம் அரண்மனைக்கு அழைத்து முகமன் கூறி, அவர்களுக்கு வேண்டியவற்றைக் குறிப்பு அறிந்து தந்து ஆட்சி செய்து முதன்மை பெற்ற திருநீற்று நெறியையே பாதுகாத்து வருவாராய்,
குறிப்புரை:

இவ்வாறு உறையூரில் இனிமையுடன் இருக்கும் நாளில், மன்னர்கள் அடிவணங்க அரசு வீற்றிருக்கக் கொங்கு நாட்ட வரும், மேற்குத் திசையின் முதல்வர்களான சிற்றரசர்களும் திறை கொணர்ந்து செலுத்தும் பொருட்டுத், தம் குலத்துக்குரிய ஒப்பில்லாத பெருநகரமான கருவூரிலே மங்கல நாளில் அரசுரிமைச் சுற்றமான அமைச்சர்கள் முதலானவருடன் வந்து அணைந்தார். *** அரசுரிமைச் சுற்றம் - அமைச்சர்கள், தானைத்தலைவர், ஐம்பெருங்குழு, எண் பேராயம் முதலியோர். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
வந்து அழகான மதிலையுடைய கருவூரின் அருகே சேர்வாராகிய புகழ்ச்சோழர், வானவர் சூழ இந்திரன் வந்து அமரா பதியைச் சேர்வதைப் போல் சேர்ந்து, உள்ளம் மிகவும் களித்துச், சிவ பெருமான் மகிழ்வுடன் வீற்றிருக்கும் திருவானிலைத் திருக்கோயிலை முன்னாக வலம் வந்து வணங்கிச், செறிந்து விளங்கும் ஒளியுடைய மாளிகையுள் புகுந்தார்.
குறிப்புரை:

அரண்மனையின்கண் உள்ள அரசிருக்கை மண்டபத்தில், மணிகளால் இயற்றப்பட்ட பொன் அரியணையின் மீது வீற்றிருந்து, மேற்குத் திசையின்கண் உள்ள நாடுகளின் மன்னர்கள் கொண்டு வந்து செலுத்தி நிரல்பட நிறுத்தப்பட்ட பெரிய யானைக் கூட்டமும், அளவற்ற குதிரை வரிசைகளும், எடைகுறையாத பொன் குவியலும், நெடுந்தொலைவிலும் ஒளி வீசும் மணிகளும் என்னும் இவை முதலான பொருள்கள் அனைத்தும் நிறைந்த திறைப் பொருள் களையும் பார்த்தருளினார்.
குறிப்புரை:

திறையைக் கொணர்ந்த மன்னர்க்கு, அவரவர்க ளும் தத்தம் அரசாணையைச் செலுத்திவரும் உரிமைத் தொழில் நிகழ்த்திவரும் படி ஆணையிட்டருளியும், நம் அரசாணையின் ஒப்பற்ற ஆட்சியின் வழி அடங்கி நிற்காது மாறுபட்டவர்கள் ஒதுங்கி நிற்கும் காவல் இடங்கள் உள்ளன என்றால் அவற்றை அறிந்து சொல்வீராக! என்று அரசியல் அறம் தெரிந்த மதியால் நீடிய அமைச் சர்க்குக் கட்டளையிட்டு அருளியும், இங்ஙனம் அரசியற்றும் நாளில்,
குறிப்புரை:

'சிவகாமி ஆண்டார்' என்ற அடியார் சென்று கொணர்ந்த திருப்பள்ளித் தாமத்தை, அன்று அவர் கையில் இருந்து பறித்துச் சிதறிய பட்டத்து யானையைக் கொன்று வீழ்த்திப் பாகர்களையும் கொன்ற 'எறிபத்தர்' எதிரே, யானை செய்த இத்தீச் செயலுக்கு 'இவ்வொறுப்பு மட்டும் போதாது, என்னையும் கொன்றருளும்' என்று இரந்து, வெற்றித் திருவுடைய தம் வடிவாளை நீட்டி, இத்தொண்டின் திறத்திலே மிகச் சிறந்து விளங்கினார். *** இந்நிகழ்ச்சியின் விரிவு எறிபத்த நாயனார் புராணத்தில் அறியப்பட்டதொன்று. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.
: விளங்குகின்ற அழகிய சந்திரன் போன்ற வெண் கொற்றக் குடையின் கீழ் வீற்றிருந்து, உலகத்தைக் காவல் செய்யவும் விளங்கும் ஒளியுடைய முடியையுடைய அவ்வரசருக்கு, வழிவழி யாக வரும் நீதி முறையில் நின்று அறநெறிகளை விளக்கும் அமைச்சர் கள், தங்கள் ஆணைவழி அளவுபடுத்திய திறைப் பொருளை முறைப்படிக் கொணர்ந்து செலுத்தாத மன்னன் ஒருவன் உள்ளான்! என்று அவர் மனங்கொள உரைப்பக் கேட்ட அரசரும், மிக்க வியப்புடன் புன்முறுவல் கொண்டு,
குறிப்புரை:

: விளங்குகின்ற அழகிய சந்திரன் போன்ற வெண் கொற்றக் குடையின் கீழ் வீற்றிருந்து, உலகத்தைக் காவல் செய்யவும் விளங்கும் ஒளியுடைய முடியையுடைய அவ்வரசருக்கு, வழிவழி யாக வரும் நீதி முறையில் நின்று அறநெறிகளை விளக்கும் அமைச்சர் கள், தங்கள் ஆணைவழி அளவுபடுத்திய திறைப் பொருளை முறைப்படிக் கொணர்ந்து செலுத்தாத மன்னன் ஒருவன் உள்ளான்! என்று அவர் மனங்கொள உரைப்பக் கேட்ட அரசரும், மிக்க வியப்புடன் புன்முறுவல் கொண்டு, *** அதிகன் - அதிகமான் நெடுமானாஞ்சி என்று அழைக்கப் பெறுபவன் என்பர். அன்னவன் ஆயின், புறநானுற்றில் 87-95, 97-101,103, 158, 206, 228 - 231 முதலான பல பாடல்கள் வழி இனைய பல செய்திகளை அறிய வாய்ப்புண்டு. அத்தகைய வாய்ப் பின்மையிள், இப்பதிகள், இவனின் வேறானவன் என எண்ண இடனுண்டு. கொங்குநாட்டின் கீழ்ப்பகுதியை ஆண்ட இம்மரபினருக்கு மலையரணாக அமைந்தவை கொல்லி மலையும் (சேலம் மாவட்டம்) குதிரைமலையும் (கோயம்புத்தூர் மாவட்டம்) ஆம்.
வலிமை பொருந்திய சோழமன்னரின் ஆணையின் வண்ணம் அமைச்சர்களும் வெளிப் போந்து, கடலைப் போன்ற பெரிய படைகளை அணிவகுத்துப் போர் மேல் செல்பவர்களாய்ப் படர்ந்து, நெருங்கிய காடுகளும், உயர்ந்த மலைகளும், பொருந்திய அரணங் களும் பொடியாகுமாறு வலிய நாற்பெரும் படைகளும் பொருந்தக் கொடிய போரை மிகுவலிமையுடன் செய்தனர். *** கைவகுத்து - அணிவகுத்து
சோழ அரசரின் பெரும்படைகள் வஞ்சி மலர் மாலை சூடிப் போருக்குச் செல்ல, அளவில்லாத அரண்களையுடைய குறுநில மன்னனான அதிகனுடைய வலிய படையும் உள்ளம் நிறைந்த கொடிய சினத்தால் முடுக்கப்பட்டு உயர்ந்த காஞ்சிப் பூச்சூடிப் போர்க்கு வர, ஒலிக்கும் பெருங்கடல்கள் இரண்டு தம்முள் கிளர்ந்து எழுந்தது போல் இருதிறப் படைகளும் போர் செய்தன. *** வட்கார் மேல் செல்வது வஞ்சியாம் உட்காது எதிர் ஊன்றல் காஞ்சியாம் என்பர் பன்னிருபாடல் ஆசிரியர் அதற்கேற்ப மேற் செல்வார் வஞ்சியும், எதிர் ஊன்றிக் காப்பார் காஞ்சியும் அணிந்தனர் என்றார்.
யானைகளுடன் யானைகள் எதிர்த்துக் குத்தின. குதிரைகளுடன் குதிரைகள் எதிர்த்து முட்டின. வீரருடன் வீரர் எதிர்த் துப் பொருதனர். இங்ஙனம் விரிந்த போர்க்களம் முழுமையாகப் போர் நிகழ்ந்தது. *** கயம் -யானை. அயம் - குதிரை. தேர்ப்படை கூறாரா யினார், பொருமிடம் மலையிடமாதலின். 'தானை, யானை, குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும்' என ஆசிரியர் தொல் காப்பியர் (தொல். புறத். 17) இம் மூவகைப் படைகளையே சிறப்பித் துக் கூறுவதும் காண்க.
மலைகளுடனே மலைகள் எதிர்த்தாற் போல் அலைபோல் பாயும் மதமான அருவிநீர் ஒலிக்க, மேல் இவர்ந்து வரும் வில் வீரர்கள் செலுத்தும் வேகத்தைவிட மிக்கு, அழிவு செய்யும் தன்மையுடைய கொலை செய்யும் யானைகளும் கொலையுண்டன. *** யானைகள் ஒன்றுடன் ஒன்று மோதிப் போர் செய்ய, இரு யானைகளும் அழிந்தன என்பதாம்.
சூறைக் காற்று என, எதிர் எதிராக ஏறுதலைக் கொண்டு பாய்கின்ற குதிரை வீரர்கள் வெவ்வேறாய் எதிர்த்துச் சினந்து ஒருவரை ஒருவர் கொன்றார்கள். *** போர் மேற்கொண்ட குதிரை வீரர்கள், தம்மில்தாம் பொருத அளவில், குதிரைகளுடன் அவ்விரு திறத்தாரும் மாய்ந்தனர் என்பதாம்.
நெருங்கி மேற் செல்லும் போரில் எதிர்த்துத் துண்டம் ஆகுமாறு செய்பவர்கள், எதிர்கூறும் வீரர்களைக் கொல்ல செஞ்சோற்றுக் கடனைக் கழிக்க எதிர்த்த பகைவர்களும், தம் மீது வந்த எதிரிகளின் செயலால் உயிர் விட்டனர். *** மேல் பொதுவகையால் மூவகைப் போர்களைக் குறித்தவாறே, சிறப்பு வகையானும் இம்மூன்று பாடல்களில் (பா. 21, 22, 23) விரித்துக் கூறினார்.
மேல் பொதுவகையால் மூவகைப் போர்களைக் குறித்தவாறே, சிறப்பு வகையானும் இம்மூன்று பாடல்களில் (பா. 21, 22, 23) விரித்துக் கூறினார். *** வீடினார் - இறந்தவர்.
விண்ணில் பறக்கின்ற கரிய காக்கைகளும், அவற்றின் மேல் திரியும் பருந்தின் கூட்டமும், மற்றும் நீண்ட கழுகு களின் வகைகளும், தமக்குச் சிறந்த உணவான இறைச்சித் துண்டங் களைப்பற்றிக் கொண்டு மேல் எழுந்தன. *** கருங்கொடி - கரிய காக்கை
அப் போர்க்களத்தில், இழுத்துக் கட்டப்பட்ட வில், கதை, சக்கரம், முற்கரம், வாள், சுரிகைப் படை, சத்தி, கழுக்கடை, வேல், எரிமுத்தலை, கப்பணம், ஒளிமிக்க அம்பு என்னும் இவை ஒன்றுடன் ஒன்று தாக்கி முறிவுற்றன. *** முற்கரம் - முன்கையில் கொள்ளும் சம்மட்டி. சுரிகைப் படை - உடைவாள். சத்தி - சிறுசூலம். கழுக்கடை - ஈட்டி. எரிமுத்தலை - நெருப்புப் போன்று பாயும் சூலம். கப்பணம் - யானை நெருஞ்சில் வடிவாக இரும்பினால் செய்யப்பட்ட படை. எல்பயில் கோல் - ஒளி பொருந்திய அம்பு.
தீட்டிய வேலை ஏந்திய அதிகனின் படைகள் மடிய, முடி சூடிய மன்னரான புகழ்ச் சோழரின் படைகள், இயற்கையாகச் சூழ்ந்த மலையரண்களையும், அவற்றைச் சூழ்ந்த செயற்கையான காப்பிடங்களுடன் கணவாய்களையும் இடித்துச் சமதரையாக்கிக், கொடிகளையுடைய மதிலையுடைய குறிஞ்சி நிலத்து ஊரையும் வளைத்துக் கொண்டன. *** வரைக்கடி - மலையாகிய காவல், சூழ் அரணம் - அதனைச் சூழ்ந்து நிற்கும் செயற்கையான காப்பிடங்கள். குறும் பொறையூர் - மலை நிலத்து ஊர்.
முற்றுகை செய்த புகழ்ச் சோழரின் படை செய் யும் போரின் முன்னே, மலையாகிய திண்மையுடைய மதிலைச் சூழ்ந்த ஊரின் காவல் அழிவு பெறவே, பற்றாகக் கொண்ட நொச்சித் துறை யான மதில் காவலானது சிதைவுபட்டு உடைந்து அழியுமாறு அதனைச் சுற்றிய வீரர்கள் துண்டித்தனர். *** நொச்சி - இப்பூவை, மதிலகத் திருந்துகாவல் செய்வார் சூடுவர். 'எயில்காத்தல் நொச்சி' என்னும் பன்னிரு படலம்.
மாறு கொண்ட வலிய படையையுடைய வாள் ஏந்திய அதிகன், தன் அழிந்து பட்ட பெரும் படைகள் பெருமலைத் தொகுதிகளாகக் காணப்பட்டதால், சிதறுண்ட மதில்களையுடைய தன் ஊரில் வாழ்தலை விட்டுப் பெரிய காடுகளில் ஓடிப் போய் ஒளிந்து கொண்டான். *** நூறுற்ற - அழிவுற்ற, நூழில் - கொன்று குவித்தல், 'மற்றவன் ஒளிவாள் வீசிய நூழிலும்' (தொல். புறம். 17) எனத் தொல்காப்பியமும் கூறும். வேழப்பழனத்து 'நுழிலாட்டு' (வரி- 257) என்னும் மதுரைக் காஞ்சியும்.
அதிகனின் படையில், போர்ச் செயலில் வெட்டுப் பட்ட வீரர்களின் தலைக் குவியல்களின் எண்ணற்ற தொகுதி அரச ரிடத்து அனுப்பப்பட்ட பின்பு, நிதிக் குவியல்களும், பெண்களும், பெரிய குதிரைகளும், போரில் சீறி எதிர்க்கும் யானைகளுமாகிய இவற்றையும் அளவற்ற படைவீரர்கள் கைக்கொண்டனர். *** போரில் வெற்றி கொண்டவர்கள், இறந்த பகைவரின் தலைகளைத் தம் அரசன் முன் கொணர்ந்து காட்டுதலும் மரபு. பகைவர் நாட்டுப் பொருட்களைக் கொள்ளுதலும் அறமேயாம்: காரணம் அவை புரப்பாரின்றிச் சிதைதலின். மகளிரைக் கொணர்தல் அவர்தம் நிறைகாக்கவாம்.
பாதுகாப்பான இடங்களை முற்றுகையிட்டு அழித்த அமைச்சர்கள், அப்போர்த்தொழிலை விட்டு நீங்கி, இந்நிலவுல கின் பேரரசரான புகழ்ச்சோழரின் திருவடிகளைச் சேரும் பொருட்டுப், பகைவென்று கொண்ட சிறப்புடனே மதில் சூழந்த கருவூர்ப் பதியை அடைந்தனர். *** இரணத் தொழில் - போர்த் தொழில்.
நிலைபெற்ற கருவூர் நகரத்தின் வாயில் முன்னே கொணரப்பட்ட கருந்தலைகளின் பெருகிய குவியலைப் படை வீரர்கள், விளங்கும் ஒளியையுடைய பெருமுடி சூடிய வேல் ஏந்திய புகழ்ச்சோழரின் முன் கொணர்ந்தனர்.
குறிப்புரை:

மண் உலகத்துக்கு உயிர் போன்றவர் எனக் கூறத்தக்க அம் மன்னர், காணும் பொருட்டுக் கொண்டு வந்த அளவில், எண்ணிக்கைப் பெருகிய அத்தலைகள் எல்லாவற்றுள்ளும், நடுவில் ஒன்றிலே குறிப்பிடத் தக்கதொரு சிறிய சடையைக் கண்டார். *** 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' (புறம் - 186) என்பவாதலின் 'மண்ணுக்குயிராம் எனும் மன்னவனார்' என்றார். சடை, அடியார் திருக்கோலங்களுள் ஒன்றாதலின் 'கண்ணுற்ற தோர் சடை' என்றார்.
அத்திருச்சடையினைக் கண்ட அளவில், உடல் நடுக்கம் கொண்டு, உள்ளம் கலங்கிக், கைகூப்பித் தொழுது, மேற் கொண்டு எழுந்த பேரச்சத்துடனே, அதுவே குறியாக எதிரே சென்று, அதைத் தம்மிடம் எடுத்துக் கொண்டுவந்த திண்மையுடைய வலிய வீரன் கைக்கொண்ட அத்தலையில், சடையானது நன்கு விளங்கித் தெரியப் பார்த்தருளிய மன்னரான புகழ்ச்சோழர், தாமரை போன்ற தம் கண்களினின்றும் கண்ணீர் பெருகி வழிய நின்று.
குறிப்புரை:

முரசுகளையுடைய வலிய படைகளைக் கொண்டு சென்று, முதன்மை பெற்ற அமைச்சர்கள் போரில் பகைவரை அழித்துப் பிறரால் மேலாகப் பேசப்படும் புகழ்கொண்ட வெற்றி பெற்றது தவிர, நன்மையினின்றும் நீங்கிய அலைதவழும் கடலால் சூழப்பட்ட உலகத் தில், திருநீற்று நெறியை நான் பாதுகாத்து அரசு செய்தது நன்றாக வுள்ளது என்று கூறி மனம் தளர்வாராகி, *** ஒன்றாமல் - நன்மை பொருந்தாமல், பகைவரைக் கோறல் அரசியலறம் எனினும், சடையுடைய அடியவரைக் கோறல் அறமன்றாதலின் அச்செயல் நன்மையொடு ஒன்றாததாயிற்று.
போர்க்களத்தில் பொரும் பொழுது, அவ்வச் செயலுக்கும் உரிய மாலையைச் சூடி, மன்னருக்கு உரிய கடமையைச் செய்து முடித்த சடையையுடைய இவர், கங்கை தாங்கிய சடையை யுடைய சிவபெருமானின் திருநெறியில் நின்றவராவர். மேதகு சிறப் புடைய இவரது சடையைத் தாங்கிவரப் பார்த்தும், இந்நில உலகத்தைத் தாங்க இருந்தேனோ! (அன்று) பழியையே தாங்குவேன் ஆனேன்! என்று உரைத்தார். *** ஓகாரம் எதிர்மறை. பார்தாங்க அன்று; பழிதாங்க அன்றோ இருந்தனன் என்பது கருத்து. எனவே இதனைக் கண்ட அளவில் உயிர் துறந்திருத்தல் வேண்டும் என்பது கருத்தாயிற்று. இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
இவ்வாறு கூறியருளியவர், இதற்குத் தீர்வாகப் பொருந்தும் செயலைத் துணிந்தவராய், தம் ஆணைவழி நிற்கும் அமைச்சர்களுக்கு, நெடிய இந்நிலவுலகத்தைக் காவல் புரிந்து அரசு செய்து, அம்பலக் கூத்தராய இறைவரின் தொண்டின் வழிவழி நிற்கு மாறு, வெற்றி பொருந்திய முடியினை என் மகனுக்குச் சூட்டுங்கள் என ஆணையிட்டார்.
குறிப்புரை:

அச்சொல்லைக் கேட்டு மனம் கலங்கும் அமைச்சர் களையும், தக்க அமைதி கூறித் தேற்றி, அவர்களின் துன்பத்தை நீக்கித் தம் சிறுமையால் செய்த பழியைப் போக்கும் செயலைத் தாமே வகுத்துச் செய்யும் கருத்தினராய்ச் சிவபெருமானின் திருநெறியில் நிலைபெற்றுச் செந்தீயை மூட்டி வளர்க்கச் செய்து, பொய்ந் நெறியை மாற்றவல்ல திருநீற்றினைப் புனைந்த கோலத்தில் சிறந்து விளங்கினார். *** கைமாற்றும் செயல் - தம் சிறுமையால் செய்த செயல்; பழிச்செயல். செம்மார்க்கம் - செம் பொருளாய சிவபெருமானின் திருத்தொண்டின் நெறி. பொய் மாற்றும் - பொய்ப் பொருளின் வழிச்சென்ற துன்பத்தை மாற்றும்.
தாம் கண்ட அச்சடைத் தலையினை, மணிகள் பதிக்கப்பட்ட பொற்கலத்தில் ஏந்தித் திருமுடியில் தாங்கி, ஒளிரும் தீயை வலம் வருவாராகி, வானவர் தலைவரான சிவபெருமானின் திருப்பெயரான திருவைந்தெழுத்தை ஓதியவாறு, செறிந்து எழுகின்ற தீப்பிழம்பினுள் மகிழ்ச்சியுடன் உட் புகுந்தருளினார்.
குறிப்புரை:

புகழ்ச் சோழர் இவ்வகையில் தீயுள் புகுந்த போது, தெய்வத் தன்மை வாய்ந்த மலர்மழையானது மண்ணுலகம் முழுவதும் நிறையப் பொழிய, பெரிய மங்கல இயங்கள் பலவும் வானத்தில் முழங்கின. அந்தியில் தோன்றும் செவ்வானம் போன்ற நீண்ட சடையினையுடைய சிவபெருமானின் அத்தகைய பெங்கருணை யான திருவடி நீழலில் நீங்காத நிலையில் புகழ்ச் சோழர் அமர்ந் திருந்தார். *** இவ்வழகிய திருப்பாடலால், நாயனார், இறைவனின் திருவடி நீழலில் இனிது அமர்ந்துள்ளமை விளங்கும். இதனால் 'பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க்கு அடியேன்' எனவரும் தொடரில் துஞ்சிய என்பதற்கு இறந்த எனப் பொருள் காண்டல் எத்துணையும் பொருந்துவதன்று எனத் தெளியலாம். துஞ்சிய புகழ் - நிலை பெற்ற புகழ்; அதனையுடைய சோழர் புகழ்ச்சோழர் என்றலே பொருந்துவதாம்.
வெற்றி முரசங்கள் பலவும் ஒலிக்கின்ற கடல் போன்ற படையையுடைய முடிகெழுவேந்தர் மூவருள்ளும் முதன்மை யரான தேன் பொருந்திய மணம் நிறைந்த மாலைகளைச் சூடிய புகழ்ச்சோழரின் பெருமையைப் போற்றிவரும் குற்றேவல் வகையால், அவர் திருவடிகளை வணங்கி வழிபட்டு, அத்துணையாலே நரசிங்க முனையரைய நாயனாரின் அடிமைப் பண்பையாம் அறிந்த வகையி னாலே இனி உரைப்பாம். புகழ்ச்சோழ நாயனார் புராணம் முற்றிற்று. ***

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history